வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா!
வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா!3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை எனப் புகார்.
வாணியம்பாடி, அக்.26- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியின் 34-வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர் பிஸ்மில்லா மசூதி அருகில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவர் வசிக்கும் பகுதியில் உள்ள 9 தெருக்களில் கடந்த 3 மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினார்.இதையடுத்து, நகராட்சி உதவிப் பொறியாளர் கோவிந்தப்பன் தலைமையிலான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் சீராக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதனைத் தொடர்ந்து, விஜயலட்சுமி தனது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்.குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி நகராட்சி அலுவலக நுழைவாயிலிலேயே பெண் நிர்வாகி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.
