ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார். சங்கு ஊதி நூதன முறையில் சமூக ஆர்வலர் போராட்டம்.
ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார். சங்கு ஊதி நூதன முறையில் சமூக ஆர்வலர் போராட்டம்.
அக்.7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் சோமலாபுரம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான இடத்தை அவசர பணத்தேவைக்காக மற்றொருவருக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர், அந்த இடத்திற்கான பணத்தை திரும்பச் செலுத்தி, மீண்டும் தனது பெயருக்கு சொத்தை வாங்கியுள்ளார். இதையடுத்து சொத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது, பத்திரப்பதிவு செய்வதற்காக பொறுப்பு சார் பதிவாளர் பீர்ராஜ் என்பவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மஞ்சுநாதன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த தொகையை வழங்க முடியாத நிலையில், பத்திரப்பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பத்திரப்பதிவு செய்து தருமாறு சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், பத்திரப்பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருவதாக மஞ்சுநாதன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அறிந்த ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் சமூக ஆர்வலருமான சுரேஷ்பாபு, சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று சங்கு ஊதி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், தமிழக அரசு எந்தத் துறையிலும் லஞ்சம் பெறக்கூடாது என அறிவுறுத்தியுள்ள நிலையில், பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக கூறப்படும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவரின் சொத்தை விதிமுறைகளின்படி பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
