ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு – கிராமிய காவல்துறையினர் விசாரணை.
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு – கிராமிய காவல்துறையினர் விசாரணை.
அக்.17- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜன், உறவினரைப் பார்க்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடராஜன் நேற்று மாலை, கன்னடிகுப்பம் பகுதியில் உள்ள தனது உறவினரைப் பார்ப்பதற்காக, வழக்கமாகச் செல்லும் விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்துள்ளது.
இந்நிலையில், தனியார் விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பத்தின் ஸ்டே கம்பியை உரசியபோது, நடராஜன் மீது மின்சாரம் பாய்ந்து இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், அருகிலிருந்த முள்கம்பி வேலியைப் பிடித்துள்ளார். மழையின் காரணமாக அந்த வேலியிலும் மின்சாரம் பாய்ந்திருந்ததால், மின்சாரம் தாக்கி நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே, நடராஜனைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இன்று காலை விவசாய நிலத்தின் வழியாகச் சென்ற அப்பகுதி மக்கள், அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், மின்சார இணைப்பைத் துண்டித்து, நடராஜனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
