முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை!
“முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள்!” – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை!
நீட் தேர்வில் வெற்றி பெற்ற தூய்மைப் பணியாளரின் மகன் – நான்கு நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடி!
அக்.24- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜோதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் முருகனின் மகன் அசோக்குமார் (22). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு கதிரிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்து நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த அசோக்குமார், கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 347 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பின்னர் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று 338 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அவருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
தனது மருத்துவக் கனவு நனவாகப் போவதை அறிந்த மாணவர் அசோக்குமார், தான் படித்த கதிரிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் குழந்தைசாமியைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அவரும் மாணவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.
ஆனால், மகிழ்ச்சி நீடிப்பதற்குள் கட்டணச் சுமை பெரும் சவாலாக மாறியுள்ளது. மருத்துவக் கல்லூரியில் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வரும் திங்கட்கிழமைக்குள் சுமார் ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறப்படும் நிலையில், கூலித் தொழிலாளியான தனது தந்தையால் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியவில்லை என மாணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- மூன்று முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. தற்போது தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், நான்கு நாட்களுக்குள் ரூ.8 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனது தந்தை தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி குடும்பத்தை நடத்தி வருகிறார். அவரால் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களும் எனது குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு உதவிக்கரம் நீட்ட வேண்டும். மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவரானால், எனது கிராம மக்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் இலவசமாக மருத்துவச் சேவை செய்வேன்” என உருக்கமாகத் தெரிவித்தார்.தொடர்ந்து, மாணவரின் தாயார் செல்வி பேசும்போது, “எனது மகன் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறான். எங்களால் இதற்கு மேல் அவனைப் படிக்க வைக்கத் தேவையான பணத்தைத் திரட்ட முடியவில்லை. எனவே, எனது மகனின் மருத்துவக் கனவு நிறைவேற தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும்” எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார்.
மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தும், பொருளாதாரச் சூழலால் அந்த வாய்ப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மாணவர் அசோக்குமாருக்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய உதவி வழங்கி, அவரது மருத்துவக் கனவை நனவாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
