திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம்
திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் பெற்றதாக விசாரணை!
திருப்பத்தூர், அக். 24: திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது, மருந்து கொள்முதல் ஒப்பந்ததாரர்களிடமிருந்து Google Pay மூலம் ரூ.1 லட்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை கண்காணிப்பாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட சுகாதார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாகத் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜன் தலைமையில், ஆய்வாளர் கௌரி, உதவி ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட போலீசார் மாலை 3 மணி முதல் இரவு 8.45 மணி வரை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது, நாட்றம்பள்ளி அருகே உள்ள பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் ரஜினி என்பவர், சென்னையைச் சேர்ந்த மருந்து கொள்முதல் ஒப்பந்ததாரர்களிடமிருந்து Google Pay மூலம் ரூ.1 லட்சம் பெற்றதாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் குறித்து ரஜினியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட இந்தச் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
