கையில் வாங்கிய லஞ்சம்… தற்போது செல்போனில் பறக்கிறது!” – 7 ஆண்டுகளாக தீர்வு கிடைக்கவில்லை என 77 வயது முதியவர் ஆவேசம்.
கையில் வாங்கிய லஞ்சம்… தற்போது செல்போனில் பறக்கிறது!” – 7 ஆண்டுகளாக தீர்வு கிடைக்கவில்லை என 77 வயது முதியவர் ஆவேசம்.
அக்.5- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், தனது நிலப் பிரச்சினைக்கு 7 ஆண்டுகளாக தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி 77 வயது முதியவர் அதிகாரிகளிடம் வேதனையுடன் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த வில்லியம் என்பவர், தனது பெரியப்பாவிடம் இருந்து 3 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை வாங்கியதாகவும், நில ஆவணங்களில் உள்ள பிழைகளைத் திருத்தக் கோரி ஜமாபந்தி உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்து மனு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், தனது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறிய அவர்,
எதற்காக எனது பிரச்சினையை தீர்க்க மறுக்கிறீர்கள்? ஏரிஸ்ட் என்னுடையதா, உங்களுடையதா? என அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மேலும், வருவாய்த்துறையில் பணியாற்றும் சர்வேயர் மற்றும் மணியகார் உள்ளிட்டோர் மீது லஞ்சம் தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த வில்லியம், முன்பு லஞ்சப் பணத்தை கையில் வாங்கினார்கள்; தற்போது செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்கிறார்கள்” என குற்றம்சாட்டினார்.
எங்கு சென்றாலும் லஞ்சம் கேட்கிறார்கள். நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த வேண்டும் என ஆவேசமாக தெரிவித்த அவர், தனது நிலப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் லஞ்சம் வாங்கக் கூடாது என வலியுறுத்தி வரும் நிலையில், அதிகாரிகள் செல்போன் மூலம் லஞ்சப் பணப் பரிவர்த்தனை செய்வதாகவும் வில்லியம் குற்றம்சாட்டினார்.
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் நீண்ட நேரம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய 77 வயது முதியவர் வில்லியம், பின்னர் வேதனையுடன் அங்கிருந்து வெளியேறினார். அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
