வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்!
வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்! நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வாணியம்பாடி, அக்.25- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது.அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், மருத்துவமனைக்குள் நடந்து செல்வதற்கே பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், தங்களது வாகனங்களிலிருந்து இறங்கி, மழைநீரிலும் சேற்றிலும் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் முதியவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வழுக்கி விழும் அபாயமும் நிலவுகிறது.மேலும், மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரமாக மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். நோய்களைக் குணப்படுத்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, இதுபோன்ற சுகாதாரமற்ற சூழல் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதுடன், எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
