ஆம்பூர் அருகே மரப்பட்டு பகுதியில் மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் மனு!
ஆம்பூர் அருகே மரப்பட்டு பகுதியில் மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் மனு!
10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிக்கை!
அக்.12- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாராப்பட்டு கிராமத்தில் ஆபத்தான வளைவால் தொடர்ந்து விபத்து அபாயம் நிலவி வருவதாகக் கூறி, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாராப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாராப்பட்டு கிராமப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் இடத்தில் உள்ள ஆபத்தான வளைவு காரணமாக, எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்றும், இதனால் அடிக்கடி விபத்து அபாயம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள மூன்று முதல் நான்கு பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களும் ஆசிரியர்களும் தினந்தோறும் இந்த ஆபத்தான சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
குறிப்பாக, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் பாலாற்றுப் பாலம் வழியாக தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், அப்பகுதியில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகளும், கடுமையான காயங்களும் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாராப்பட்டு கிராமத்தின் மையப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும், கிராமத்திலிருந்து தொலைவான பகுதியில் மேம்பாலம் அமைத்தால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று சாலையைக் கடக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், திட்ட வரைபடத்தில் உரிய மாற்றங்களைச் செய்து, மாராப்பட்டு கிராமத்தின் மையப் பகுதியில் மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
