திருப்பத்தூரில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு – 63 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை!
திருப்பத்தூரில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு – 63 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை!
அக்.21- திருப்பத்தூர் மாவட்டம், பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி, லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையிலும், நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
அதன்படி பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த காவலர் நினைவுச் சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சீருடையில் கருப்பு ரிப்பன் அணிந்து, நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து, 63 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
