ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ்
ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ்.
அக்.24- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நியூபெத்லகேம் 1வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் அப்துல் ஜப்பார். இவர் அங்குள்ள டீக்கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தில்ஷாத், காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள். மகள் திருமணம் முடிந்து கணவருடன் வாழ்ந்து வருகிறார். கணவன் மனைவி மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தில்ஷாத் ஆம்பூரில் உள்ள கனரா வங்கிக்கு சென்று அவருடைய வங்கி கணக்கில் சம்பளம் மற்றும் மகளிர் உரிமை தொகை எடுக்க முற்பட்ட போது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வங்கி அதிகாரியிடம் விசாரித்த போது சென்னை அம்பத்தூரில் என்.எஸ்.எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும்,
அதில் 2 கோடியே 38 லட்சத்து 72 ஆயிரத்து 328 ரூபாய் ஜிஎஸ்டி வரி நிலுவையில் உள்ளது. அதனை செலுத்தும் வரை வங்கி கணக்கு முடக்க கோரி அம்பத்தூரில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்துள்ளதாக கூறியுள்ளார்.இதனை கேட்ட தில்ஷாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சம்பவம் குறித்து திஷாத் ஆம்பூர் நகர காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் கொடுக்க சென்று போது புகார் மனுவை வாங்க போலீசார் மறுத்துநீங்கள் சென்னை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் புகார் மனுவை வழங்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.சென்னைக்கு போவதற்கு கூட எங்களிடம் வசதி இல்லை. கணவருக்கு டீ கடை வேலைக்கு சென்றால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 350 கூலியும், தனக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் சம்பளம் மற்றும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் என மொத்தம் ரூபாய் 8 ஆயிரம் வங்கி கணக்குக்கு வரும். இப்போ வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் குடும்ப செலவுகளை எப்படி சம்பாளிப்பது என்று தெரியவில்லை என்று கூறி வேதனை அடைந்தார்.ஆதார் எண் மற்றும் பேன் கார்டு பயன்படுத்தி போலி நிறுவனம் தொடங்கி ஜி.எஸ்.டி வரி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக வாணியம்பாடி,ஆம்பூர், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ஏழை எளிய மக்களின் ஆதார் மற்றும் பேன் கார்டு பயன்படுத்தி ஜி.எஸ்.டி மோசடி நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
