திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு!
அக்.24- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் தலைமை வகித்தார்.
இதில் விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
அதன்படி, நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இறக்குவதற்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், விவசாய நிலங்களில் உரக் கலவை தயாரிப்பதற்கான பயிற்சி முகாம்கள் நடத்த வேண்டும், மக்காச்சோளப் பயிர்களை விவசாயிகள் பயனுள்ள வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மண்டலநாயனகுண்டா பகுதியில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும், நபார்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும், ஆலங்காயம் ஏரியைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பெரிய ஏரிகள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், விவசாயச் சந்தை அமைக்க ஏற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும், இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும், விவசாயிகளுக்குத் தேவையான வெட்ட ஆட்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இதற்கிடையே, பாலாற்றின் கரையோரம் சுமார் 56 கிலோமீட்டர் தொலைவுக்கு வளர்ந்துள்ள மரங்களை அகற்றுவது தொடர்பாகவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் கூடுதல் பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாகவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பாலசுப்ரமணியன், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
