வாணியம்பாடி பாலாற்று கிளைப் பாலத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க நகரமன்ற உறுப்பினர் கோரிக்கை!
வாணியம்பாடி பாலாற்று கிளைப் பாலத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க நகரமன்ற உறுப்பினர் கோரிக்கை!
வாணியம்பாடி, அக்.20 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியிலிருந்து பெரியபேட்டை வழியாக சென்னாம்பேட்டை செல்லும் சாலையில், பாலாற்று கிளைப் பாலம் அருகே சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களிலும் இரவு நேரங்களிலும் இந்தச் சாலையில் செல்லும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சி 8-வது வார்டு (கோட்டை) நகர்மன்ற உறுப்பினர் சி.முஹம்மத் நவுமான், சேதமடைந்த சாலையை உடனடியாகச் சீரமைக்கக் கோரி நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மனுவில், சாலையில் உள்ள பள்ளங்களை மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உடனடியாக நிரப்பி, சாலையைச் சமன்படுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பொறியியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தற்காலிக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதுடன், தேவையான இடங்களில் நிரந்தர சாலைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
