மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி – 60 மாணவர்கள் பங்கேற்பு! போட்டிக்கு செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பிய மாவட்ட ஆட்சியர்.
மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி – 60 மாணவர்கள் பங்கேற்பு!
போட்டிக்கு செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பிய மாவட்ட ஆட்சியர்.
அக்.6- திருப்பத்தூர் மாவட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 60 மாணவர்கள், மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கான பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினார்.
2026–27ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் மாவட்ட அளவில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
9 மற்றும் 10ஆம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் கட்ட மாநில அளவிலான போட்டிகள், அக்டோபர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் முறையே தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற உள்ளன.
மாணவர்கள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று பாதுகாப்பாக திரும்பும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கவின்கலை, நுண்கலை, கருவி இசை, தோல் கருவி, துளைக்கருவி, நாடகம், நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
மாநில அளவிலான போட்டிகளில் தன்னம்பிக்கையுடனும் முழு ஈடுபாட்டுடனும் பங்கேற்று வெற்றி பெற்று, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.
மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும், அவர்களுடன் பயணித்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று வரவும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் வழித்துணையாளர்களாக உடன் செல்கின்றனர்.
