ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்.
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்!
சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்.
அக்.25- திருப்பத்தூர் மாவட்டம், ஜலகாம்பாறை சுற்றுலாத் தலத்தில் பருவமழை காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏலகிரி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு, விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக நீர்வீழ்ச்சியில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியின் அழகைக் கண்டு ரசிப்பதுடன், நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். மேலும், அருகில் அமைந்துள்ள முருகன் மற்றும் சிவன் கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனமும் செய்து வருகின்றனர்.நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இருப்பினும், தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
