திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை!
திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு!
இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை!
திருப்பத்தூர் மாவட்டம் அக்:27-
சர்வதேச ஆசியா அளவிலான செஸ் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் வென்று திருப்பத்தூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த இளம் செஸ் வீராங்கனை WCM யாக்ஷினி பி. அவர்களுக்கு, திருப்பத்தூரில் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அருகே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் வானவேடிக்கைகள், பட்டாசு வெடிப்புகள், மேளதாளங்கள் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் விழாக்கோலமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, யாக்ஷினிக்கு 15 அடி நீளமுள்ள மாலை அணிவித்து பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று, தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.நண்பர்கள் சார்பில் ரூ.1 லட்சம் காசோலை வழங்கி பாராட்டு,செஸ் போட்டிகளில் சாதனை படைத்த யாக்ஷினியை ஊக்குவிக்கும் வகையில், அவரது நண்பர்கள் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பாராட்டு நிகழ்வு, வீராங்கனைக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் யாக்ஷினிக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவம் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். திருப்பதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, யாக்ஷினியின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
மேலும், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, இளம் வயதிலேயே சர்வதேச அளவில் சாதனை படைத்த யாக்ஷினியைப் பாராட்டினர்.
சிறு வயதிலேயே செஸ் விளையாட்டில் தனது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி நான்கு பதக்கங்களை வென்றுள்ள யாக்ஷினி, எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வாழ்த்தினர்.
இளம் வயதில் சர்வதேச சாதனை!
நான்கு பதக்கங்களுடன் திருப்பத்தூருக்குப் பெருமை!
WCM யாக்ஷினிக்கு குவியும் பாராட்டுகள்!
