காசநோயாளிகளுக்கான மாதாந்திர ரூ.1,000 உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எம்.பி. ரவிக்குமார் கடிதம்
காசநோயாளிகளுக்கான மாதாந்திர ரூ.1,000 உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் – அமைச்சர் டாக்டர் கே. ஜி. அருண்ராஜ் எம்பி ரவிக்குமார் கடிதம்.
விழுப்புரம், அக்.7: காசநோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ரூ.1,000 உதவித்தொகை 2026 ஜனவரி முதல் வழங்கப்படாத நிலையில், அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் து. ரவிக்குமார், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி. அருண்ராஜ் கடிதம் எழுதியுள்ளார்.காசநோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காசநோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளும், ஊட்டச்சத்து வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சுமார் 3,000 பேர் இந்த உதவித்தொகையைப் பெற்று வந்த நிலையில், 2026 ஜனவரி முதல் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு அனுப்பும் தொகையை நோயாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைச் செய்வதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் எனத் தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உதவித்தொகை வழங்கப்படாததால் தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் காசநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாமதம் அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் காசநோய் சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகள் தேவை
விழுப்புரம் மாவட்டத்தில் வளர்த்தி, கிட்டார், இருவேல்பட்டு ஆகிய வட்டாரங்களில் காசநோயால் ஏற்படும் மரணத்தின் அளவு அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் காசநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 படுக்கைகள், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 2 படுக்கைகள், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 படுக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய காசநோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவதால், தற்போதுள்ள படுக்கைகள் போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்தபட்சம் 20 படுக்கைகள் கொண்ட காசநோய் சிகிச்சை வார்டை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனைகளில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
