ஆய்க்குடியில் 60 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள்
ஆய்க்குடியில் 60 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!
கடையநல்லூர், அக். 21:
1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையிலும், நாடு முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள ஆய்க்குடி காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நீத்தார் நினைவிடத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், தென்காசி டிஎஸ்பி அதியமான், சங்கரன்கோவில் டிஎஸ்பி ரகுபதி ராஜா, புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம், ஆவணக் காப்பக டிஎஸ்பி இளவரசன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் இசக்கி ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பணியின்போது உயிரிழந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும், வீரமரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் ஜான்சன் ஆகியோர் தலைமையிலான ஆயுதப்படைக் காவலர்கள் 60 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, பணியின்போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
