ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் – ஆட்சியர் நேரில் ஆய்வு.
நவ.4- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெரியமோட்டூர், மண்டலவாடி, சின்னமோட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.பெரியமோட்டூர் ஊராட்சியில் சமூக நீர் சேகரிப்பு குளம் அமைக்கும் பணி, பூனக்குட்டை பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணி, துரைசாமி வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறிய சுகாதாரக் கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும், மண்டலவாடி ஊராட்சியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையம், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட 8 மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகள் கட்டும் பணி, சின்னமோட்டூர் ஊராட்சியில் நடைபெறும் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி, ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பெரியமோட்டூர் ஊராட்சியில் ரூ.72.55 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மேலும், ரூ.5.96 லட்சம் மதிப்பீட்டில் ஆண்களுக்கான சிறிய சுகாதாரக் கட்டடம் மற்றும் ரூ.8.21 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கான சிறிய சுகாதாரக் கட்டடம் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மண்டலவாடி ஊராட்சியில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளை விரைந்து முடித்து பயனாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சின்னமோட்டூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டும் பணியையும், மண்டலவாடி ஊராட்சியில் 29,000 செடிகள் வளர்க்கப்பட்டு வரும் பணியையும் பார்வையிட்டார்.
சின்னமோட்டூர் ஊராட்சியில் ரூ.66.33 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்கவும், வரும் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையலறை, உணவுப் பொருட்களின் தரம், இருப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அப்பகுதியில் செயல்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு மையங்களையும் பார்வையிட்டார். சேகரிக்கப்பட்ட குப்பைகளை மழைநீர் தேங்காத வகையில் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
