ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு.
நவ.2- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் வடகாத்திப்பட்டி மின்சார அலுவலகத்தில் தற்காலிக மின்வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கீழ்முருங்கை பகுதியில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தைச் சீரமைக்கும் பணியில் சாமுவேல் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஸ்டே கம்பியை இழுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், கம்பியைப் பிடித்தபடியே சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், சாமுவேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகளை சாமுவேலின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். பணியின்போது சாமுவேலுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியமே அவரது உயிரிழப்பிற்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
