கடையநல்லூர் அருகே மனித–வனவிலங்கு மோதலைத் தடுக்க சிறப்பு ஒத்திகைப் பயிற்சி! சென்னையிலிருந்து வந்த அதிரடிப்படை கமாண்டோக்கள் வனத்துறையினருக்குப் பயிற்சி
கடையநல்லூர் அருகே மனித–வனவிலங்கு மோதலைத் தடுக்க சிறப்பு ஒத்திகைப் பயிற்சி!
சென்னையிலிருந்து வந்த அதிரடிப்படை கமாண்டோக்கள் வனத்துறையினருக்குப் பயிற்சி
கடையநல்லூர், அக். 30:
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே வடகரை அடவிநயினார் அணைக்கட்டுப் பகுதியில் மனித–வனவிலங்கு மோதலைத் தடுப்பது தொடர்பான சிறப்பு ஒத்திகைப் பயிற்சி வனத்துறையினருக்கு நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன், மனித–வனவிலங்கு மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவை குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வடகரை அடவிநயினார் அணைக்கட்டுப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினருக்கான சிறப்புப் பயிற்சி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தலைமையில், மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் நெல்லைநாயகம், கடையநல்லூர் வனச்சரகர் கனகராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் பயிற்சி நடைபெற்றது.
சென்னையிலிருந்து வந்த உயர் சிறப்பு அதிரடிப்படை கமாண்டோ குழுவினர், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு வனச்சரகங்களைச் சேர்ந்த வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட வனத்துறைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
இதில் ஆறுகளைக் கடத்தல், வனப்பகுதியில் தங்குதல், இரவு நேர ரோந்து, கயிறு ஏறுதல், துப்பாக்கி சுடுதல், வெடிபொருட்களைக் கையாளுதல், முதலுதவி அளித்தல், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களை மீட்பது, யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும், வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வருவது குறித்தும், காட்டு யானைகளின் காது அசைவுகள், பார்வை மற்றும் நடவடிக்கைகளைக் கவனித்து அவற்றின் நடமாட்டத்தை அறிந்து பாதுகாப்பான முறையில் எதிர்கொள்வது குறித்தும் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் வனவர்கள் மகேந்திர பாண்டியன், அஸ்வின், மகேந்திரன், மணிகண்டன், கார்த்திக் ராஜா, சங்கர் ராஜா, பாரதி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உட்பட மாவட்டம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
