வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்ய வந்த 2 பெண்கள் கைது!
வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்ய வந்த 2 பெண்கள் கைது!
வாணியம்பாடி, அக்.31- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்ய வந்த இரண்டு பெண்களை கிராமிய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம், புதூர் பகுதிக்கு ஆட்டோவில் இரண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்காகச் சென்று இருப்பதை குறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குநருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் குழு சிவலிங்கம் மற்றும் மருத்துவர் அரவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆட்டோவில் வந்திறங்கிய இரண்டு பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்தபேட்டை பகுதியைச் சேர்ந்த கீதா (45), இந்திராணி (60) என்பது தெரியவந்தது.மேலும், இருவரும் மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, இருவரையும் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து, கிராமிய போலீசார் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
