முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனைப் பராமரிக்க மருத்துவ விடுப்பு எடுத்த தந்தைக்கு பணிமனையில் நெருக்கடி?
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனைப் பராமரிக்க மருத்துவ விடுப்பு எடுத்த தந்தைக்கு பணிமனையில் நெருக்கடி?
அக்.30- திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கண்ணன், (58) இவர் தர்மபுரி மண்டலம், சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.கடந்த ஆண்டு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் 25 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். அதேபோல், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனை மருத்துவமனையில் அனுமதித்து சுமார் 30 நாட்கள் உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார்.இந்நிலையில், தனக்கு இன்னும் சுமார் 251 நாட்கள் மருத்துவ விடுப்பு இருப்பதாகக் கூறும் கண்ணன், ஏற்கனவே இயக்கி வந்த திருப்பத்தூர் - தர்மபுரி வழித்தடப் பேருந்தில் இருந்து மாற்றப்பட்டு, பெங்களூரு செல்லும் பேருந்தில் பணியமருத்துப்பட்டுள்ளார்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.இதையடுத்து, பணிமனை மேலாளர் செல்வகுமார், செக்கிங் இன்ஸ்பெக்டர் தமிழரசு மற்றும் கட்டுப்பாட்டாளர் சத்யராஜ் ஆகியோர் தன்னிடம் தரக்குறைவாகப் பேசியதாக கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், “நீ கலெக்டரிடம் வேண்டுமானாலும் போ, யாரிடம் வேண்டுமானாலும் போ. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் சொல்லும் பேருந்தில்தான் வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டுச் செல்” என மிரட்டும் தொனியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
மகனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவ விடுப்பு எடுத்த தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பணியாற்றி வந்த திருப்பத்தூர் - தர்மபுரி வழித்தடப் பேருந்திலேயே மீண்டும் ஓட்டுநராகப் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகனைப் பராமரிக்க விடுப்பு எடுத்த தந்தைக்கு பணியிடத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
